ஞாயிறு, 1 அக்டோபர், 2023

எனது உலகம் வேறு. உனது உலகம் வேறு.

என்னோட உலகம் வேறு
உன்னோட உலகம் வேறு.
        - கவிஞர்.பாரதிகிருஷ்ணன்

நான்
கிழக்கு வானத்தின்
வைகறைப் பொழுதில்
விண்மீன்களைக் கண்டு
விடியலைக் காண்கிறேன்..
நீயோ,
தொலைக்காட்சிப் பெட்டியில்
சூரிய உதயத்தைக்
காண்கிறாய்...

நான் புழுதியில்
கிடக்கும் விதைகளை
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
நீயோ, கணினியின்
திரை வழியே
காளை,கரடியின்
ஏற்ற, இறக்கத்தினை
எதிர் நோக்குகிறாய்....

குளிர்ச்சாதன கூட்ட
அரங்கினுள்
'விவசாயி' நாட்டின்
முதுகெலும்பு என்கிறாய்...
நானோ,
விலா எலும்புகளால்
என் நிலத்தைக்
கீறிக்கொண்டிருக்கிறேன்....

நீ!
பீட்சாவும்,பர்க்கரும்
'பேரின்பம்' என்கிறாய்...
நானோ, நேற்றைய பொழுதின்
சோற்றுப் பருக்கைகளின்
எச்சத்தை அமிர்தமாக
எண்ணி ஆனந்நமடைகிறேன்...

வாசனைத் திரவியங்களோடு
பழக்கப்பட்ட நீங்கள்,
ஆடை களைந்த எங்கள்
கருத்த மேனியில்
உதிர்த்த வியர்வைத்
துளிகளின் வாடையை
நுகர்ந்த்தில்லை....

கடன் மீறிப் போனால்,
கண்டம் மாறுவதில்லை...
' நுகத்தைப் பூட்டும்'
கயிறே
எங்கள் 'கழுத்தைப்' பூட்டும்.
மானத்தைவிட மரணம்
எங்களுக்கு துச்சமே!

நமக்குள்
உலகம் வேறாகினும்,
என் உலகத்தில்தான்
வாழ்ந்தாக வேண்டும்.
ஆம்,
நாங்கள் ' சேற்று மொழி'
பேசினால்தான்
நீங்கள் ' சோற்று மொழியை'
சொந்தமாக்க முடியும்.


சனி, 30 செப்டம்பர், 2023

முள்

பெரிய மனிதனையும்
தலை குனியச் செய்தது
' முள்'